search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்எம் சுப்பிரமணியம்"

    நிலுவையில் உள்ள வழக்குகளில் அரசு பதில் மனு தாக்கல் செய்யாமல் வழக்கை இழுத்தடிப்பதை வேடிக்கை பார்க்க முடியாது என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார். #HighCourt
    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய நிலத்துக்கு பட்டா வழங்க அரசு அதிகாரிகள் மறுப்பதாக ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2016ம் ஆண்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் ஸ்ரீஜெயந்தி, இந்த வழக்கிற்கு திருவள்ளூர் கோட்டாச்சியர், கும்மிடிப்பூண்டி வட்டாச்சியர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார்.

    இதற்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்தார். பதில் மனு தாக்கல் செய்யாமல், அரசு அதிகாரிகள், வழக்கை இழுத்து அடிப்பதை வேடிக்கை பார்க்க முடியாது என்று கூறினார்.

    பின்னர் நீதிபதி பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:

    ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளில், அரசு தரப்பில் உரிய காலத்தில் பதில் மனு தாக்கல் செய்வதே கிடையாது. உரிய ஆவணங்களையும், பதில் மனுவையும் தாக்கல் செய்து வழக்கை விரைவாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று எண்ணம் அதிகாரிகளிடம் இல்லை.

    அதுமட்டுமல்ல, அரசு தரப்பில் ஆஜராகும் அரசு வக்கீல்களும், பதில் மனு தாக்கல் செய்யாமல், வாய்தா வாங்குவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால், வழக்கும் வழக்கம்போல் தள்ளிவைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    இதுபோன்ற செயல்களில் கூட்டுச்சதி இருக்கலாம். ஏன் என்றால், குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றால், ஐகோர்ட்டும் வழக்கின் தன்மையின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கும். அதாவது, வழக்கில் பதில் மனுவை அரசு தரப்பில் தாக்கல் செய்யவில்லை என்பதால், வழக்கு தொடர்ந்தவர்களுக்கு ஒருதலைபட்சமான (எக்ஸ் பார்ட்டி) தீர்ப்பு கிடைக்கும்.

    இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது. ஒரு வழக்கு என்றால், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். அதை செய்யவில்லை என்றால், அரசியல் அமைப்புச் சட்டத்தின் படியான கடமையை அரசு நிறைவேற்ற தவறி விட்டது என்பதாகி விடும்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்ட விதி 3 ஏ-யின்படி, ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பினால், 3 மாதங்களுக்குள் எதிர்தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று கூறுகிறது.

    ஆனால் ஏனோ, இந்த 3 ஏ விதியை ஐகோர்ட்டு கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 2ந்தேதி நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த விதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்? என்பதற்கான காரணம் தெரியவில்லை. அதேநேரம், இந்த விதி அமலுக்கு வந்தால்தான், வழக்கின் பதில் மனுவை காலதாமதம் இல்லாமல், 90 நாட்களுக்குள் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்படும்.

    எனவே, இந்த விதியை மீண்டும் அமலுக்கு கொண்டு வரவேண்டும் அல்லது வழக்குகளை விரைவாக விசாரித்து முடிவுக்கு கொண்டு வரும் வகையில், பதில் மனு தாக்கல் செய்ய கால அளவை நிர்ணயம் செய்து புதிய விதிகளை உருவாக்கவேண்டும். இதுகுறித்து ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.கண்ணப்பன் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 19ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  #HighCourt
    ×